படித்து முடித்த உடனே அரசு வேலை.. இந்த கோர்ஸ் எடுத்தால் நிச்சயம் உண்டு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எவ்வளவோ கஷ்டப்பட்டு படிப்பவர்களுக்கும், உரிய வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும்நிலையில், படிப்பை முடித்தவுடன் அரசு வேலை என்றால் எப்படி இருக்கும்...? அப்படியொரு அரும் வாய்ப்பைப் பற்றிய செய்தி இது!
இந்திய அளவில் அடுத்த பத்தாண்டுகளில் 3 லட்சம் ஊரமைப்பு வடிவமைப்பாளர்கள் தேவைப்படுவார்கள் என்றும் அதற்கேற்ப ஆண்டுக்கு 8 ஆயிரம் பேரை உருவாக்கும் வகையில், புதிய படிப்புகளைத் தொடங்கவேண்டும் என்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
இளநிலை திட்டமிடல் பட்டம் B. Plan. படிப்பில் 6 ஆயிரம் பேரும், முதுநிலை திட்டமிடல் M.Plan. படிப்பில் 2 ஆயிரம் பேரும் என, ஆண்டுக்கு 8 ஆயிரம் பேரை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நடப்புக் கல்வி ஆண்டிலேயே, அண்ணா பல்கலைக்கழகத்தின்- கட்டடக்கலை - திட்டமிடல் பள்ளியில், இளநிலை, முதுநிலை திட்டமிடல் பட்டப் படிப்புகள் தொடங்கப்படுகின்றன.
இளங்கலைப் பட்டப் படிப்பில் 75 இடங்களும், முதுகலை பட்டப் படிப்பில் 60 இடங்களும் நிரப்பப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
இதற்காக, முதல் கட்டமாக, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், நகர்ப்புற ஊரமைப்புத் திட்ட இயக்ககம் ஆகியவை இணைந்து 10 கோடி ரூபாயை வழங்குகின்றன. 5 ஆண்டு களுக்கு தமிழக அரசின் சார்பில் மொத்தம்18 கோடியே 54 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
அவசரத் தேவை என்பதால் போர்க்கால அடிப்படையில் இந்தப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
சிவில் இஞ்ஜினியரிங் எனப்படும் கட்டுமானப் பொறியியல் படித்தவர்களுக்கு இது கூடுதலாகப் பயன்படும் என்கின்றனர், கல்வி ஆலோசகர்கள்.