அரசு முத்திரை..! சைரன்..! ஓட்டை காரில் ஜாலியாக சுற்றி வந்த மோசடி கும்பல்.. தட்டிதூக்கிய போலீஸ்..
சேலம் அரியானூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அரசு முத்திரையுடன் வந்த வாகனம், வலது புறத்தில் சேதமடைந்து இருந்ததால் நிறுத்தி விசாரணை நடத்தினர். வாகனத்தில் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததுடன், ஒருவர், சென்னையில் கணக்குத் துறையில் நிர்வாக அதிகாரியாக பணியில் இருப்பதாக அடையாள அட்டையை காண்பித்துள்ளார். இருப்பினும் போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்ததால் தீவிரமாக விசாரித்ததில் அவர்கள் மோசடி நபர்கள் என்பது தெரியவந்தது. கணக்கு அதிகாரி என்று கூறிக்கொண்டு ஏமாற்றிய திருமால் என்பவரும், கருப்பையா என்பவரும் சைரன் வைத்த வாகனத்தில் வலம் வந்து, சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றியுள்ளனர். மேலும் தலைமைச் செயலகத்துக்கு வரும் நபர்களை குறிவைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் பலர் ஏமாந்திருக்கலாம் என்பதால், புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.