வீடு புகுந்து 42 கிலோ எடையுள்ள தலைமுடியில் கை வைத்த கும்பல் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி
கிருஷ்ணகிரி அருகே புதுபேட்டை, மேற்கு மாட தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் பெண்களின் தலைமுடிகளை சேகரித்து அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்த நிலையில், சுமார் 42 கிலோ எடை கொண்ட தலைமுடியை வீட்டில் மூட்டை கட்டி வைத்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி இரவு குடும்பத்துடன் வெங்கடேசன் கோயிலுக்கு சென்றிருந்த போது, வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 42 கிலோ எடை கொண்ட தலைமுடி மூட்டையை திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் என கூறப்படு நிலையில், வெங்கடேசன் போலீசில் புகாரளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, மிட்ட அள்ளி பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. ரஞ்சித்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 42 கிலோ தலைமுடியை பறிமுதல் செய்த நிலையில், தலைமறைவாக உள்ள மூவரை வலை வீசி தேடி வருகின்றனர்.