விர்ர்ர்...சென்னைக்கு இது புதுசு...கண் சிமிட்டும் நொடியில் பறக்கும் கார்கள் படையெடுத்த VVIP-கள்

x

விர்ர்ர்...விர்ர்ர்...சென்னைக்கு இது புதுசு

கண் சிமிட்டும் நொடியில் பறக்கும் கார்கள்

நாடே திரும்பி பார்க்க படையெடுத்த VVIP-கள்

240 KM வேகம்...இன்னும் உடல் அதிருது

சென்னையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. சென்னை மக்களுக்கு விறுவிறுப்புடன் புதியதொரு அனுபவத்தைக் கடத்திய கார் பந்தயம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

சென்னை மக்களின் காதுகளில் இந்த ஓசை இன்னும் சில நாட்களுக்கு கேட்டுக்கொண்டு இருக்கும்....

ஆம்... விர்ரென்று பறந்த கார்கள் புதியதொரு அனுபவத்தை மக்கள் மனதில் கடத்திச் சென்றிருக்கின்றன.

தெற்காசியாவிலேயே முதல் முறையாக சென்னையில் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் கார் பந்தயம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

ஆயிரத்து 600 சிசி திறனுள்ள என்ஜின் கொண்ட ரேஸ் கார்கள், மணிக்கு சுமார் 240 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை சாலைகளில் சீறிப்பாய்ந்தன.

சென்னை தீவுத்திடலை சுற்றி சுமார் மூன்றரை கிலோ மீட்டர் சர்க்யூட்டில், 2 நாட்களாக கார் பந்தயம் நடைபெற்றது.

Jk FLGB 4, Formula 4, இந்தியன் ரேஸிங் லீக் ஆகிய 3 பிரிவுகளாக நடந்த பந்தயத்தில் வீரர், வீராங்கனைகள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தனர்.

25 நிமிடங்கள் பிளஸ் ஒரு சுற்று என்ற அடிப்படையில் நடந்த ஃபார்முலா-4 பந்தயத்தில் பிரதான சுற்றுகளில் கொச்சி அணி வீரர் பார்டர், ஹைதராபாத் அணி வீரர் அலிபாய் வெற்றிவாகை சூடினர்.

ஐ.ஆர்.எல், Jk FLGB 4 பிரிவில் வென்றவர்களுக்கும் வெற்றிக் கேடயங்களை வழங்கி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார்...

தடைகளைத் தாண்டி கார் பந்தயம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்....

பந்தயத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீராங்கனை எமிலி, சென்னை ஸ்ட்ரீட் சர்க்யூட் தங்களுக்கு மிகவும் பிடித்துப்போனதாக புன்னகை உதிர்த்தார்.....

கார் பந்தயத்தைக் காண பல்வேறு பிரபலங்களும் குவிந்திருந்தனர். கங்குலி, நாக சைதன்யா, சிவகார்த்திகேயன், யுவன்சங்கர் ராஜா, ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்டோர் பந்தயத்தைக் கண்டுகளித்தனர்.

கார் பந்தயத்தை இந்தியாவில் முன்னெடுத்துச் செல்ல இது சிறந்த முயற்சி என மகிழ்ச்சி தெரிவித்தனர் பிரபலங்கள்...

போட்டியைக் கண்டுகளித்த மக்கள், கார் சென்ற வேகத்தில் தங்கள் உடலே அதிர்ந்ததாகவும், இதற்கு முன் இப்படி எல்லாம் பார்த்ததே இல்லை என்றும் உற்சாகம் பொங்க பேசினர்.

தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக மாற்றுவதற்கான முன்னெடுப்புகளில் முக்கியமானதாக ஃபார்முலா-4 கார் பந்தயம் பார்க்கப்படுகிறது.

புயல், மழை, வெள்ளம், வழக்குகள், அரசியல் ரீதியான விமர்சனங்கள் என பல்வேறு தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக பந்தயத்தை நடத்தி முடித்து தடம் பதித்து இருக்கிறது தமிழ்நாடு அரசு...


Next Story

மேலும் செய்திகள்