ஃப்ளிப்கார்ட்டில் செல்போன் கவர் ஆர்டர் போட்டவருக்கு ரூ.18 லட்சம் காலி... இப்படியும் நடக்கும் உஷார்
ஃப்லிப்கார்டு பெயரை பயன்படுத்தி 18 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில், கால் சென்டர் உரிமையாளர் ஒருவரை டெல்லியில் வைத்து தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
தேனி மாவட்டம் டி. சிந்தலச்சேரியை சேர்ந்தவர் அருள் பிரகாசம். இவர் கடந்த மாதம் பிரபல ஃப்லிப்கார்ட் இணையதளத்தில் செல்போன் கவர் ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறார். இந்நிலையில், ஃப்லிப்கார்ட் இணையதள பெயரில் பிரகாசத்தை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், சுமார் 13 லட்சம் மதிப்புள்ள மகேந்திரா எஸ்யூவி கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி வலை விரித்துள்ளார். இதனை நம்பிய பிரகாசத்திடம் இருந்து, வரிகட்ட வேண்டும் எனக்கூறி சுமார் 18 லட்ச ரூபாய் வரை 11 வங்கி கணக்குகள் மூலம் அந்நபர் பெற்றதாக தெரிகிறது. இறுதியில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரகாசம், தேனி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். விசாரணையில், டெல்லியில் கால் சென்டர் நடத்தி வரும் ரோகித் குமார் என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவர, அவரை டெல்லியில் வைத்து கைது செய்திருக்கும் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.