"தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்" - தமிழக அரசு அதிரடி
"தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்" - தமிழக அரசு அதிரடி முடிவு
வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திலும் தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்றால் 2000 ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் அரசாணை விரைவில் அமுல்படுத்தப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இது குறித்த வழக்கு நீதிபதி ரமேஷ் மற்றும் ஜி ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்றால் ரூபாய் 50 மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது என்றும், இனி 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை தயாரிக்கப்பட்டுள்ளது என கூறினார். ஓரிரு நாளில் அது அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் தமிழில் பெயர் பலகை வைக்காத எத்தனை நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.