"ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளை.." தமிழக அரசு தடுக்குமா?" - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்த தமிழக அரசு தயங்குவது ஏன் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி தனியார் பேருந்துகளின் கட்டண வசூல் குறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, கோவைக்கு மூவாயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை, ஆம்னி பேருந்துகள் கட்டணம் நிர்ணயித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் 13 ஆயிரம் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள், இரண்டாயிரத்து 92 பேருந்துகளுக்கு மட்டும் சராசரியாக ஆயிரத்து 768 ரூபாய், அபராதம் விதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை ஆணையிட்டும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். எனவே அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.