அபராதம் போட்ட தமிழக அரசு.. வீணாக வந்து தானாக சிக்கிய மருத்துவர்.. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
போலி மருத்துவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள் எனக் கூறி இருக்கும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, அவர்களை இரும்புகரம் கொண்டு அரசு அடக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காலத்தில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை அபராதம் விதித்தது. இதில், தென்காசியை சேர்ந்த அமிர்தலால் என்பவருக்கு சொந்தமான மருத்துவமனைக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அபராதத்தை எதிர்த்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன் வந்தது. அப்போது, மேற்சொன்ன அபராத நடவடிக்கை மூலம் சுமார் பதினான்கரை கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகவும், இவற்றை திரும்பி வழங்க இயலாது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் தன் மருத்துவமனையை சுகாதாரமாக வைத்திருந்ததற்கான எந்த ஆவணங்களையும் சமர்பிக்கவில்லை எனக் கூறிய நிலையில், அதிகாரிகள் அபராதம் விதித்தது சரியானதுதான் எனவும் கூறி தீர்ப்பு வழங்கினார். அதேநேரம் மனுதாரர், எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிசனுக்கான டிப்ளமோ சான்றிதழை சமர்ப்பித்திருக்கிறார் எனவும், இந்த சான்றிதழை வைத்து மருத்துவம் பார்க்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார். தொடர்ந்து, போலி மருத்துவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள் எனக் கூறிய நீதிபதி, மனுதாரரின் மருத்துவமனையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், அங்கு பணி புரியும் மருத்துவர்கள் தகுதியானவர்களா என்பதை விசாரித்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் கூறி உத்தரவிட்டார்.