தனியாக இருந்த ஒரு வீடு... உள்ளே நுழைந்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சட்டவிரோதமாக வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கருமாண்டி செல்லிபாளையம், சீலம்பட்டி, ஒண்டிபுலிகாடு என்ற இடத்தில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட வீட்டை போலீசார் சோதனையிட்டதில், வீட்டிற்குள் வாண வெடி தயாரிக்க பயன்படும் குச்சிகள், வெடிமருந்து 2 கிலோ, அலுமினிய பவுடர் 2 கிலோ, சிறிய கயிறுகள் உள்ளிட்டவைகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் திங்களூர், காசுகாரன் பாளையத்தை சேர்ந்த இளங்கோ என்பவர் அனுமதியின்றி வாண வெடிகள் தயாரிக்க வெடிமருந்துகளை வெளியில் இருந்து வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இளங்கோவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.