குப்பைக்கு செல்லும் சிரட்டையில் குக்கிங் பொருட்கள்.. பூமித்தாயை காப்பாற்றும் எலக்ட்ரீசியன்
செரிக்க முடியாமல் பூமித்தாய் திணறிப்போனாலும் நவநாகரீக உலகில் நெகிழி தவிர்க்க முடியாததாகி விட்டது...
எமனாய் சுற்றுச்சூழலை தினம் தினம் கொன்று கொண்டிருக்கும் நெகிழிக்கு சரியான மாற்றைத் தேடும் வெகு சிலரில் ஒருவர் தான் இந்த பிரபாகரன்...
நெல்லை பணகுடி அருகே ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் பிரபாகரன்... சிறுவயது முதலே கைவினைப் பொருள்கள் செய்வதில் அதீத ஆர்வம் இவருக்கு...
வீட்டில் நெகிழிப் பயன்பாட்டை முடிந்தளவு தவிர்த்து விடும் பழக்கம் கொண்ட பிரபாகரன் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு அடுப்பெரிக்க உபயோகமாகும் தேங்காய் சிரட்டைகளைக் கொண்டு சமையல் உபகரணங்கள் முதல் வீட்டு உபயோகப் பொருள்கள் வரை செய்து அசத்துகிறார்... பிரபாகரனுக்கு இந்தக் கலையில் எப்படி ஆர்வம் வந்தது என்பதை அவரிடமே கேட்கலாம்...
பிரபாகரன்
"2019ல் இருந்து இந்த வேலைகளை செய்து வருகிறேன்"
"எலக்ட்ரிக்கல் வேலை செய்யப்போன இடத்தில் ஒரு டீ கப் இருந்தது"
"அந்த டீ கப்பைப் பார்த்து எனக்கு இதில் ஆர்வம் வந்தது"
"சிரட்டையில் இருந்து நிறைய பொருள்கள் செய்துள்ளேன்"
"கரண்டி,பேனா ஸ்டாண்டு,உண்டியல்..."
"பிளாஸ்டிக்கில் இருக்கும் அனைத்துப் பொருள்களையும் தயாரிக்கலாம்"
"பிளாஸ்டிக் இல்லை என்பதால் நிறைய பேர் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்"
அதுமட்டுமல்லாமல் குத்துவிளக்கு, சிவலிங்கம், பூந்தொட்டி, மலர் மாதிரி, கூஜா, கோப்பை, மீன் தொட்டி, உண்டியல் மற்றும் அலங்காரப் பொருள்கள் என தேங்காய் சிரட்டையைக் கொண்டு பிரபாகரன் செய்யும் பொருள்களை அடுக்கிக் கொண்டே போகலாம்...
முதலில் தான் செய்த பொருள்களை வீட்டில் உபயோகப்படுத்துவதோடு நிற்காமல், விழாக்களுக்கு செல்லும்போது நண்பர்கள், உறவினர்களுக்கு அன்பளிப்பாகவும் வழங்கி வந்துள்ளார்... அதைக் கண்டு ஆச்சரியமுற்ற மக்கள் பிரபாகரனிடம் ஆர்வமுடன் சிரட்டை பொருள்களை வாங்கிச் செல்லத் துவங்கினர்...
தேவையற்ற பொருள் என தூக்கி எறியப்படும் தேங்காய் சிரட்டையில் இருந்து கலைநயமிக்கை கைவினைப் பொருள்களை செய்து அசத்தும் பிரபாகரனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன...