நாளை தீர்ப்பு மேஜைகளின் எண்ணிக்கை- மாற்ற முடியுமா..? Vote Counting எப்படி இருக்கும்..?

x

சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் எவ்வாறு வாக்குகள் எண்ணப்படும்...? அதன் வழிமுறைகள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

தமிழகத்தில் 39 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களும், 39 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு செவ்வாயன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பொதுவாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும், தேவை இருப்பின் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று கூடுதல் மேஜைகள் அமைக்கப்படும்.

ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி தனித்தனியாக வீடியோவில் பதிவு செய்யப்படுவதோடு, சுற்றியுள்ள நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும்.

ஹாட் ஸ்பாட்டான சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளிலும் இந்த வழிமுறைப்படியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது..

லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய சென்னை வாக்கு எண்ணும் மையத்தில், மொத்தம் 300 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு 15 எல்.ஈ.டி. திரைகளில் அதனை கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இங்கு மொத்தம் 445 போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

அதே போல், ராணி மேரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வடசென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில், 280 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 12 திரைகளில் கண்காணிக்கப்படுகிறது. இங்கு 447 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

தென் சென்னை தொகுதியின் வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழகத்தில், மொத்தம் 342 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 13 திரைகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. இங்கு சுமார் 492 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

சென்னையின், மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 700 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் 268 மேசைகளில் 321 சுற்றுகளாக எண்ணப்படுகிறது.

இதில், சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதிக்கு மட்டும் 30 மேஜைகள் அமைக்கப்படுகிறது.

ஒவ்வொரு மேஜைக்கும், ஒரு மேற்பார்வையாளர், உதவி மேற்பார்வையாளர், ஒரு நுண்பார்வையாளர், வேட்பாளர்கள் முகவர்கள் உள்ளிட்டோர் இடம் பெறுவர்.

வாக்கு எண்ணிக்கையின் போது, ஒவ்வொரு சுற்றின் போதும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியின், சீல் சரியாக இருக்கிறதா என்பதை வேட்பாளர்களின் முகவர்கள் உறுதி செய்வார்கள். அதன் பிறகே, வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஒவ்வொரு அறையிலும் ஆர்.ஓ மற்றும் ஏ.ஆர்.ஓ. முன்னிலையில் பெரிய திரையில் முடிவுகளை அறிவிப்பார்கள்.

இந்த நடைமுறைப்படியே அனைத்து தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகும்.


Next Story

மேலும் செய்திகள்