தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது எப்போது? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தீபாவளிக்கு அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், ஒலி மற்றும் காற்று மாசுபாட்டை தடுக்க, இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று, காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மக்களிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, குறைந்த ஒலி மற்றும் குறைந்த காற்று மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும், உரிய அனுமதியுடன், திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அதிக ஒலி மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என்றும், மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்கள், குடிசைப் பகுதி, எளிதில் தீப்பற்றும் இடங்கள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.