1929ம் ஆண்டுக்கு பின் ஒரு பதிவு கூட இல்ல.. மாயமான கிராமம் - "இப்ப வரை பதில் கிடைக்கல"
தர்மபுரி மாவட்டத்தில் 90 ஆண்டுகளாக பத்திரப்பதிவுத் துறையில், பதிவு இல்லாமல் காணாமல் போன தங்களது கிராமத்தை மீட்டுத் தரக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்...பென்னாகரம் அருகே உள்ள, மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, டி.சோளப்பாடி என்ற ஊரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் அரசு நடுநிலைப்பள்ளி, நியாய விலை கடை, உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன... இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு ஆதார் அட்டை, தேர்தல் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன... இங்கு சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்களும் 100க்கும் மேற்பட்ட வீட்டுமனை பட்டாக்களும் உள்ளன... 1915 வரை, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இந்த கிராமத்திற்கான பதிவு உள்ளது. அதன் பிறகு, 1929 வரை சேலம் மாவட்டம் மேச்சேரி பத்திர பதிவு அலுவலகத்தில், இந்த கிராமத்திற்கான பதிவு உள்ளது. அதன் பிறகு, இந்த கிராமம் தொடர்பான எந்த பதிவும், எந்த பத்திர பதிவு அலுவலகத்திலும் இல்லை. இங்குள்ள மக்கள், தங்களது வீடு மற்றும் விவசாய நிலங்களை மற்றவர்களுக்கு விற்பனை செய்ய முடியாமலும், பெயர் மாற்றம் செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர்... பல்வேறு தரப்பினரிடமும் 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை என இவர்கள் புலம்பும் நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், 1929க்கு பிறகு, இந்த கிராமம் தொடர்பான எந்த பதிவும் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது... இதனால் ஊர் மக்கள் ஒன்று கூடி தங்களது கிராமத்தை மீட்டுத் தரக் கோரி போராட்டம் நடத்தினர்.