"சேமியா பொட்டலத்தில் இறந்த தவளை" - அதிரடி சோதனையில் அதிகாரிகள்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காடேரி அம்மன் நகரை சேர்ந்த பூமிநாதன், அணில் மார்க் நிறுவனம் தயாரித்த சேமியா பொட்டலத்தை மளிகைக் கடையில் வாங்கியுள்ளார்... பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்த போது அதற்குள் இறந்து நீண்ட நாளான தவளை ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்... இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தேவகோட்டை பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மளிகைக் கடையில் ஆய்வு நடத்தினர்... தொடர்ந்து திண்டுக்கல்லில் EB காலனி, செட்டி நாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, சிட்கோ, பாடியூர், லட்சுமணபுரம் உள்ளிட்ட 7 பகுதிகளில் இயங்கி வரும் குறிப்பிட்ட உணவுப் பொருள் தயாரிப்பு கூடங்களில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இருப்பிலுள்ள சேமியா பொட்டலங்களைத் தற்காலிகமாக விற்பனை செய்யக் கூடாது என்று தயாரிப்பாளருக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள கிண்டி உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் விற்பனைக்கு அனுப்பப்பட்ட புகாருக்கு உரிய பேட்ச் எண் கொண்ட சேமியா பாக்கெட்டுகள், பொருட்களைத் திரும்பப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தயாரிப்பாளர் மீது உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.