``எந்த கட்சியும் எங்களுக்கு வேணாம்''..- பாமக, விசிக கொடிக்கம்பத்தில் பாய்ந்த கடப்பாரை
``எந்த கட்சியும் எங்களுக்கு வேணாம்''..விரக்தியில் பெண் எடுத்த முடிவு - பாமக, விசிக கொடிக்கம்பத்தில் பாய்ந்த கடப்பாரை
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மதுப்பிரச்சனையால் இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்களை கிராம மக்கள் சேதப்படுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.புவனகிரி அருகே மஞ்சகொள்ளை கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, உடையூர் என்ற கிராமத்தில் இளைஞர்கள் சிலர் சாலையில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது ஓரமாக சென்று மது அருந்துமாறு செல்லதுரை கூறியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த செல்லதுரை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலில் ஈடுபட்ட 6 நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி பா.ம.க, வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் செல்லதுரை உறவினர்கள், விருதாச்சலம் - புவனகிரி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பா.ம.கவினர் கலைந்து சென்றனர். இந்நிலையில், திடீரென ஆத்திரமடைந்த பெண் ஒருவர், தங்கள் ஊருக்கு எந்தக்கட்சியின் கொடிக்கம்பமும் தேவையில்லை என்று கூறி, வி.சி.க மற்றும் பா.ம.க. கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.