ஐடி ஊழியர் குடும்பத்துடன் கொன்று எரிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ..
ஐடி ஊழியர் குடும்பத்துடன் கொன்று எரிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ..முதுகுக்கு பின்னாலே கொலையாளிகளா? - 2 பெண்களிடம் விடிய விடிய விசாரணை
கடலூர் அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட வழக்கில், 2 பெண்கள் உட்பட 4 பேரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.கடலூர் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மனைவி கமலீஸ்வரி, அவரது இளையமகன் சுமந்த்குமார், அவரது மகன் நிஷாந்த் ஆகியோர் வீட்டிலேயே கொல்லப்பட்டு எரிக்கப்பட்டிருந்தனர். இவ்வழக்கில் இதுவரை துப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், கொலை நடந்த வீட்டில் இருந்த பொருட்களை ஆய்வு செய்து தடயங்களை தேடினர். இதில், பக்கத்துவீட்டு சுவர் மற்றும் கழிவறையில் ரத்தக்கறை இருந்ததை கண்ட போலீசார், தடயவியல் நிபுணர்களை கொண்டு சுவற்றில் இருந்த ரத்தக்கறை மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பக்கத்து வீட்டை முழுமையாக ஆய்வு செய்து சில தடயங்களையும் சேகரித்தனர். இதையடுத்து, அந்த வீட்டில் இருந்த இரு பெண்கள் உள்ளிட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பரிசோதனை முடிவுகள் வெளியானபின், உண்மைக் குற்றவாளிகள் யார் என்பது தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.