குற்றாலத்தில் தடைக்கு பின் வந்த அறிவிப்பு... விடிந்ததும் மாறிய காட்சி
குற்றால அருவிகளில் நீர் வரத்து சீரடைந்துள்ள நிலையில்,
அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க
அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில்
அமைந்துள்ள குற்றால அருவிகளில் கடந்த சில நாட்களாக
பெய்த கோடை மழையினால் நீர்வரத்து பெற்று புத்துணர்ச்சி
பெற்றன. நேற்று கேரளாவில் தென் மேற்கு பருவமழை
தொடங்கியுள்ள நிலையில், கேரளாவை ஒட்டி உள்ள தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்தது. நேற்று இரவு குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க சிறிது நேரம் தடை விதிக்கப்பட்டது. பின்பு நீர்வரத்து சீரானதை தொடர்ந்து சுற்றுலா
பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றால மெயின் அருவி, புலியருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இன்று காலை முதல் மெயின் அருவி கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.