ஒரே வாரத்தில் 25,000 பாதிப்பு.. 'கே.பி.2' வேகத்தை பார்த்து மிரளும் நாடுகள் - அடித்த எச்சரிக்கை மணி

x

ஒரே வாரத்தில் 25,000 பேருக்கு பாதிப்பு

'கே.பி.2' வேகத்தை பார்த்து மிரளும் நாடுகள்

இந்தியாவிலும் நுழைந்தது...அடிக்கும் எச்சரிக்கை மணி

புதிய வகை கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் காய்ச்சல் பரிசோதனை தொடங்கியுள்ள நிலையில், இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சென்ற டிசம்பர் மாதம் திடீரென வேகமெடுத்த 'ஜே.என்.1' வகை கொரோனாவை சமாளித்த உலக நாடுகள்.... தற்போது கோடைகால விடுமுறை சமயத்தில் அதிகரித்து வரும்

'கே.பி.2' வகை கொரோனா பரவலால் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதமே அமெரிக்காவிலும், இந்தியாவிலும் கண்டறியப்பட்டது தான் , இந்த 'கே.பி.2' வகை கொரோனா என்றாலும்.... திடீரென சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்க இந்த வகை கொரோனா பரவல் காரணமாகி இருப்பது இங்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.

'ஜே.என்.1' வகை கொரோனாவின் பின் தோன்றலாக அறியப்படும் 'கே.பி.1', 'கே.பி.2' வகை கொரோனா திரிபுகளுக்கு பொதுவாக FLiRT என்று பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது FLiRT வகை கொரோனா பாதிப்புகள் அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், தென் கொரியா இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என பல நாடுகளில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இதனால் ஓய்ந்த கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து விட கூடாது என கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றன, உலக நாடுகள்.

இந்தியாவை பொறுத்தவரை இந்த புதிய வகை கொரோனாவுக்கு 300க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகம் பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை வியாழன் வரை இவ்வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தான விழிப்புணர்வின் அவசியத்தை உணர்த்த தமிழக சுகாதாரத் துறை, கோவை விமான நிலையத்தில் பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனையை தொடங்கியிருக்கிறது.

அதே வேளையில், புதிய வகை கொரோனா குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தமிழக சுகாதாரத் துறை கேட்டு கொண்டுள்ளது.

இந்த 'கே.பி.2' வகை கொரோனா 'ஜே.என்.1' வகை கொரோனாவை விட வேகமாக பரவக் கூடியது என்றாலும் இதனால் ஏற்படும் பாதிப்பு குறைவு என கூறுகின்றனர், மருத்துவர்கள்.

அதே வேளையில், தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் இருமல், சோர்வு மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை அசால்டாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் அவசியம்.


Next Story

மேலும் செய்திகள்