"வேலையில் முழு கவனம்.. இல்லை சஸ்பெண்ட்" - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அதிரடி
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பொறுப்பேற்றுள்ள குமரகுருபரன், ஆன்லைன் வழியில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு, குறிப்பிட்ட நாட்களில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மற்றும் கல்வித்துறை உயர் அலுவலர்களுடன் ஆன்லைன் வழியில் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய குமரகுருபரன், வாகனம் இல்லாத அலுவலர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். வழக்குகள் சார்ந்து உடனுக்குடன் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், காலதாமதம் கூடாது என்றும் தெரிவித்தார். வேலையில் முழு கவனத்துடன் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்றும், குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். கோப்புகளை கட்டிப்போட்டு ஊறுகாய் போடலாம் என்று நினைத்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் குமரகுருபரன் எச்சரித்தார்.