தமிழர்கள் பெயரில் வெளியான நாணயங்கள்.. வள்ளுவர் முதல் முன்னாள் முதல்வர் கருணாநிதி வரை
தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் பெருமைப்படுத்தும் வகையில் முதன் முதலாக 1995ல் வள்ளுவருக்கு 5 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன...
அதன்பிறகு 2004ம் ஆண்டு எளிமைக்கும் நேர்மைக்கும் உண்மைக்கும் பெயர்போன முன்னாள் முதல்வர் காமராஜருக்கும்...
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என போதித்த மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவுக்கு 2009ம் ஆண்டிலும்...
அதேபோல் இந்தியாவின் உணவு தன்னிறைவுக்கு வித்திட்டவர்களில் மிக முக்கியமானவரான சி.சுப்பிரமணியத்துக்கு 2010லும்... 100 ரூபாய், 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
அதே ஆண்டு தமிழர்களின் பெருமைகளைப் பறைசாற்றி நம் கட்டட கலைக்கு சான்றாகத் திகழும்...1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த...தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக முதன்முதலாக 1000 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியாகின...
ஐநா அவையில் அரங்கேற்றம் நிகழ்த்தி தமிழ்நாட்டிற்கும்...இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த மறைந்த பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு 2017ல் 10 ரூபாய், 100 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன...
அதே ஆண்டில், கொடுத்து சிவந்த கரம் என புகழப்பட்டவரும், இதயக்கனி என்று அண்ணாவால் அன்போடு அழைக்கப்பட்டவருமான முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு 5 ரூபாய், 100 ரூபாய் நாணயங்கள் வெளியாகின...
தமிழுக்காகவும்...தமிழ்நாட்டிற்காகவும்...உயிர் மூச்சுள்ள வரை உழைத்த ஓய்வறியா சூரியனாய் போற்றப்படும்... முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தற்போது 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டு மத்திய அரசு பெருமை சேர்த்துள்ளது...