பொங்கிய பவானி ஆறு... கொஞ்சம் கொஞ்சமாக வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி கதவணை மதகுகளை மின்சார தொழில்நுட்பம் மூலம் இயக்க முடியாத நிலையில், ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்கி, கரையோரப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
பவானி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் பவானி கதவணை மின் நிலையம்-2 கட்டப்பட்டுள்ளது. கதவணையில் சுமார் 21 அடிக்கு தண்ணீரை தேக்கி, 2 இயந்திரங்களை இயக்குவதன் மூலம், 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்தி மற்றும் மழைக்காலங்களில் பவானி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் போது 6 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுவது வழக்கம். இந்நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, இன்று அதிகாலை பவானி கதவணை 2-க்கு நீர்வரத்து அதிகரித்தது. மதகுகளை மின்சார தொழில்நுட்பம் மூலம் இயக்க முடியாமல் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கதவணை-2க்கு பின்புறம் ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்கியது. இதனால் ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள சீரங்க ராயன் ஓடை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.