முகத்தில் மிளகாய் பொடி தூவி.. லட்சக்கணக்கில் வழிப்பறி செய்த கும்பல்.. திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்
திருச்சியில், மணல் குவாரி ஊழியரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, 15 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை காரைகோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், திருச்சி கல்லணை அருகே கிளிக்கூடு கிராமத்தில் செயல்படும் மணல் குவாரியில் பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு, மணல் விற்பனை செய்யப்பட்ட 15 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றார். உத்தமர்சீலி அருகே, மர்ம நபர்கள் சிலர் மணிகண்டன் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி, அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார், பாலாஜி, ரஞ்சித் பிரேம்குமார், தாண்டீஸ்மூர்த்தி, ஷேக் அப்துல்காதர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து, 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.