50 ரூபாயால் பறிபோன ரூ.3 லட்சம் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் 3 லட்சம் ரூபாயை நூதன முறையில் கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
வளசரவாக்கம் கைக்கான் குப்பத்தைச் சேர்ந்த பாரதி என்பவர், ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள வங்கியில் 3 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, தனது வாகனத்தின் முன்புறத்தில் வைத்தபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர், கீழே 50 ரூபாய் கிடப்பதாகவும், அது தங்களுடையது தானா? என்றும் கேட்டுள்ளார். அதற்கு பாரதி மறுத்த நிலையில், அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் தனது வாகனத்தின் முன்புறத்தை பார்த்தபோது 3 லட்சம் ரூபாயை காணவில்லை என்பதை உணர்ந்து, வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பணம் கொள்ளையடித்த நபரை ஆந்திராவுக்குச் சென்று பிடித்தனர். அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் ஓ.ஜி குப்பத்தை சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்த போலீசார், கொள்ளையில் தொடர்புடைய அவரது கூட்டாளிகள் மூவரை தேடி வருகின்றனர்.