சென்னை போரூரில் ரத்தம் சூடேறிய இளைஞரால்... கடமையை செய்த போலீஸ் துடிதுடிக்க சிதறிய கொடுமை
சென்னை போரூரில் ரத்தம் சூடேறிய இளைஞரால்... கடமையை செய்த போலீஸ் துடிதுடிக்க சிதறிய கொடுமை
சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே ரேஸ் பைக் மோதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதன் பின்னணியை பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..
போக்குவரத்துக்காக மட்டுமன்றி கெத்து காட்டுவதற்காகவும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்த தொடங்கியதன் விளைவு தான் சாலை விபத்துகள்...
பைக் மீது அதீத பிரியம் காட்டும் இளைஞர்கள், அன்றாட பணிகளுக்கு கூட ஸ்போர்ட்ஸ் பைக்-ஐ பயன்படுத்தும் அளவிற்கு இருசக்கர வாகனம் மீது கிரேஸ் (craze) கொண்டுள்ளனர்.
இப்படி ஸ்போர்ட்ஸ் பைக் எனப்படும் ரேஸ் பைக்கின் மீதான மித மிஞ்சிய மோகம் தான் காவலர் ஒருவரின் உயிரை பறித்திருக்கிறது..
சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் 53 வயதான குமரன். போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரிந்து வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்னரே சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இவர் தாம்பரம், மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகே, இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அண்ணா நகரை சேர்ந்த சத்யசாய்ராம் என்ற இளைஞர், தனது காவாசாகி நிஞ்சா பைக்கில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார்.
சரியாக போரூர் சுங்கச்சாவடி அருகே தனது ரேஸ் பைக்கில் சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருந்த போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் குமரனின் வாகனத்தின் மீது மோதினார்.
இதில் தூக்கி வீசப்பட்ட குமரன் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். அத்துடன் ரேஸ் பைக்கில் வந்த இளைஞரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய சூழலில், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், காவலர் குமரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதிவேகம் உயிரை பறிக்கும் என சாலையெங்கும் விழிப்புணர்வு வாசகங்கள் நிறைந்திருந்தாலும், ரேஸ் பைக்கில் கெத்து காட்ட வேண்டுமென நினைக்கும் இளைஞர்கள் பலர் இன்னும் பல உயிர்களை காவு வாங்கி வருவது பெரும் வேதனையாக உள்ள நிலையில், மக்களை பாதுகாக்கும் காவலர் ஒருவரே பலியாகி இருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.