உயர்நீதிமன்றம் போட்ட 75 உத்தரவுகள்.. அறிக்கை தாக்கல் செய்த அறநிலையத்துறை

x

தமிழகத்தில் கோவில்கள் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், இந்து சமய அறநிலையத் துறைக்கும், தமிழக அரசுக்கும் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 75 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கோவில்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்புதல்களை வழங்க, தொல்லியல் துறை நிபுணர்கள், ஆகம நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய மாநில அளவிலான நிபுணர் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில்கள் சீரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவு துவங்கப்பட்டுள்ளதாகவும், 13 ஆயிரம் கோவில்களில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு மானியம், ஒரு லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவில் நிலங்களை ஆக்கிரமித்த 17 ஆயிரத்து 450 பேருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கோவில் சிலைகள் திருட்டு, சொத்துகள் பெயர் மாற்றம் செய்த விவகாரங்களில் தொடர்புடைய அதிகாரிகள் 111 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்