சென்னையின் உயிர்நாடி மெரினா கோரம்.. நின்ற இடத்திலேயே சுருண்ட 230 பேர்.. பேரிடியா விழுந்த தகவல்
ஆசை ஆசையாய் வான் சாகசத்தை பார்க்க வந்த பார்வையாளர்கள், உயிரிழந்த சம்பவம் சென்னையையே உலுக்கியுள்ளது. என்ன நடந்தது ? உயிரிழப்புக்கு என்ன காரணம் ? என்பதை பார்க்கலாம் விரிவாக
இதுவரை சென்னை பார்த்திராத வான் சாகச நிகழ்வுக்காக லட்சக்கணக்கான மக்கள் அலைகடலென மெரினா கடற்கரையில் திரள, வெயிலும் கொளுத்தியது...
இருப்பினும் குடைகளுடன் வான் சாகசத்தை காண மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்க...சுமார் 2 மணி நேரத்திற்கு வான் சாகசத்தால் அதிர்ந்தது மெரினா கடற்கரை...
ஒரு பக்கம் மக்கள் வான் சாகச கொண்டாட்டத்தில் மக்கள் திளைத்திருக்க, மற்றொரு புறம் பார்வையாளர்களாக வந்திருந்த பலருக்கு வாட்டும் வெயிலும், கூட்ட நெரிசலும் உடல் அசௌகரியத்தை ஏற்படுத்தியது..
இதில் பலருக்கு உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம் ஏற்பட, சுமார் 230க்கும் மேற்பட்டோர் நீர்சத்து குறைபாட்டால் அவதிக்கு ஆளாகினர்..
இதில் 93 பேர், 30 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் அடுத்தடுத்து துயரச் செய்திகள் வெளிவரத் தொடங்கின..
வான் சாகசத்தை கண்டு களிக்க கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரிண்டிங் வேலை செய்து வந்த 56வயதான ஜான் வருகை தந்துள்ளார்..
மனைவி மற்றும் தம்பியுடன் காமராஜர் சாலை பார்த்தசாரதி கோவில் அருகே உள்ள மணல் பரப்பில் அமர்ந்து கண்ட போது திடீரென மயக்கமடைந்ததால், ஓமந்தூரர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால், துரதிஷ்டவசமாக, சிகிச்சை பலனின்றி ஜான் உயிரிழந்தார்..இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதன் பதற்றம் தணிவதற்குள் அடுத்த துயரச் செய்தி வெளியானது..
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த 34 வயதேயான கார்த்திகேயன் வான் சாகச நிகழ்ச்சியை கண்டு களித்துவிட்டு இருசக்கர வாகனத்தை எடுத்த போது திடீரென மயங்கியுள்ளார்.
அவரை உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..
இதே போல், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான தினேஷ்குமார் என்பவர் வான் சாகச நிகழ்ச்சியை கண்டு களித்த போது திடீரென மயக்கமடைந்ததால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், மெரினா கடற்கரையில், பெருங்களத்தூரை சேர்ந்த 36 வயதான சீனிவாசன் 10 வயது சிறுமியுடன் வருகை தந்த நிலையில், நிகழ்ச்சியை பார்த்து விட்டு, கூட்ட நெரிசலில் இருசக்கர வாகனத்தில் எம்.எல்.ஏ. ஹாஸ்டல் வழியாக வந்துள்ளார்..
அப்போது ஓமந்தூரார் மருத்துவமனை அருகே மயக்கமடைந்து அவர் கீழே விழ, உடனடியாக அம்மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது..
ஆனால், எதிர்பாராத விதமாக அவர் உயிரிழக்க, இந்த துயரத்திற்கிடையே சென்னையில் கூலி வேலை செய்து வந்த மரக்காணத்தை சேர்ந்த மணி என்பவர் மெரினா மணல் பரப்பிலேயே உயிரிழந்து கிடந்ததால், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...