லைக்ஸ்காக டபுள் மீனிங் பேச்சு..சென்னையில் பிரபல யூடியூப் சேனல் கேள்வியால் உயிரை விட துணிந்த பெண்

x

இரட்டை அர்த்தத்தில் பேட்டி எடுத்து யூடியூபில் பதிவிட்டதால், இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், சென்னையில் யூடியூப் சேனலின் வீ.ஜே. உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்... இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்...

இளைஞர்களை குறிவைத்து, ஆபாசம் மற்றும் இரட்டை அர்த்தத்தில் பேட்டி எடுத்து பதிவிடுவதையே சில யூடியூப் சேனல்கள் வேலையாக செய்து வருகின்றன.

Public Talks என்ற பெயரில் முகம் சுழிக்க வைக்கும் அரட்டைகளால், லைக்ஸ் மற்றும் வியூஸ்களை அள்ளும் இந்த குரூர நோக்கம், இளம்பெண் ஒருவரை தற்கொலை முயற்சியில் தள்ளி இருக்கிறது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பூங்காவில், வாயில் நுரை தள்ளியபடி இளம்பெண் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தபோது, அந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த நிலையில் தான், இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

அண்மையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள மால் ஒன்றுக்கு இந்த இளம் பெண், தனது தோழிகளுடன் சென்றபோது, யூடியூப் சேனல் சார்பில் ஸ்வேதா என்பவர், காதல் தொடர்பாக பேட்டி எடுத்திருக்கிறார்.

அதில் இரட்டை அர்த்தம் மேலிடுவதை உணர்ந்த இளம்பெண், வீடியோவை வெளியிட வேண்டாம் என கேட்டுள்ளார். அப்படி எல்லாம் செய்ய மாட்டோம் என உறுதி அளித்து விட்டு, சில தினங்களுக்கு முன் அந்த வீடியோவை சம்மந்தப்பட்ட யூடியூப் சேனல் பதிவிட்டிருக்கிறது.

இரட்டை அர்த்தத்துடன் இருந்த அந்த வீடியோ குறித்தும், அதற்கு வந்த ஆபாச கமென்டுகள் பற்றியும் தோழிகள் மூலம் அந்த இளம்பெண்ணுக்கு தகவல் சென்றிருக்கிறது.

பெற்றோரை இழந்துவிட்டு, அண்ணனின் அரவணைப்பில் வாழும் அந்தப் பெண், மன உளைச்சலின் எல்லைக்கே சென்று, எலி மருந்தை சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்திருக்கிறார்.

இதையடுத்து, யூடியூப் சேனலின் உரிமையாளர் ராம வீரப்பன், ஒளிப்பதிவாளர் யோகராஜ், பேட்டி எடுத்த ஸ்வேதா ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

நீதிமன்றத்தில் மூவரையும் ஆஜர்படுத்திய போது, அவர்களின் உறவுக்கார பெண் ஒருவர், அங்கு இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

சில தினங்களுக்கு முன், யூடியூப் சேனல்களின் கட்டுப்பாடற்ற தன்மை குறித்து நீதிமன்றமே கேள்வி எழுப்பிய நிலையில், யூடியூப் சேனலில் ஆபாச பேட்டியால் இளம் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்