சென்னையில் `ஹேர்பின்' வடிவில் உள்ளே நுழைந்த ஆபத்து - மக்களே உஷார்.. வெளியான எச்சரிக்கை
பெங்களூருவை சேர்ந்தவர் நித்யா. இவர் தன் கணவருடன் சேர்ந்து சென்னை, அடையாறு காந்திநகர் பகுதியில் உள்ள சலூன் கடைக்கு காரில் வந்த நிலையில், காரை சாலையோரம் நிறுத்தி விட்டு சலூன் கடைக்குள் சென்றிருக்கிறார். அப்போது, கார் கண்ணாடியை உடைத்த மர்மகும்பல் காருக்குள் இருந்த லேப்டாப் மற்றும் கைப்பையை திருடிச் சென்றிருக்கின்றனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஹேர்பின் மற்றும் உண்டிக்கோல் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி காரில் இருந்த பொருள்களை கும்பல் திருடிச் சென்றது தெரியவந்தது. இதே போல் அருகிலுள்ள 3 இடங்களில் கும்பல் கைவரிசை காட்டியது தெரியவர, திருச்சி ராம்ஜிநகர் கொள்ளையர்கள் ஸ்டைலில் கொள்ளையடிக்கப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். கடந்தாண்டு இதேபோல் சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியதும், இதில் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் சிலரை போலீசார் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சம்பவம் குறித்தான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.