சென்னை சென்ட்ரலில் நடந்த நடக்கவே கூடாத கொடுமை... இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது...

x

மேற்கு வங்கத்திலிருந்து விவசாய கூலியாக தமிழகம் வந்தவர்கள், வேலை இல்லாமல் பசியால் மயங்கி விழுந்த நிலையில், ஒருவர் உயிரிழந்த கொடுமை சென்னையில் நிகழ்ந்துள்ளது.

வடமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வேலை தேடி தமிழகத்தை நோக்கி பலர் வரும் காட்சியை ரயில் நிலையங்களில் கண்டிருப்போம். அவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பதால், தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோவது ஒருபுறம் பேசு பொருளாகவே இருந்து வருகிறது.

மற்றொரு புறம்... வட மாநில விவசாய கூலி தொழிலாளர்கள் வேலை கிடைக்காமல், பசியால் மயங்கி விழுந்திருப்பதும், அதில் ஒருவர் உயிரிழந்திருப்பதும் சென்னையில் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 10ஆம் தேதி மேற்கு வங்கத்திலிருந்து 11 விவசாயக் கூலிகள், ரயில் மூலமாக சென்னை சென்ட்ரல் வந்துள்ளனர். ஒப்பந்ததாரர் மூலமாக பொன்னேரியில் விவசாய வேலைக்கு சென்ற நிலையில், 3 நாட்களாக காத்திருந்தும் வேலை கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதனால், சொந்த ஊருக்கு செல்வதற்காக 13ஆம் தேதி மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளனர். ஆனால், ஒரு வேளை உணவுக்குக் கூட காசு இல்லாமல், ரயில் நிலையத்திலேயே காத்திருந்த நிலையில், 16ஆம் தேதி 4 பேர் பசியால் மயங்கி விழுந்துள்ளனர்.

4 பேரையும் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ரயில்வே போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அவர்களில், பசியில் பச்சை மீனை சாப்பிட்ட சமர்கான் என்பவர், உடல் உறுப்புகள் செயலிழந்த‌தால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது உடலை, விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க, தனியார் ஐஏஎஸ் அகாடமி இயக்குனராக உள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இஸ்ரேல் ஜெபசிங் உதவி செய்துள்ளார்.

இதே போன்று, மேற்கு வங்க ஆளுநருடைய சட்ட ஆலோசகரின் தந்தையும் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான சசிதரனின் கவனத்திற்கும் இந்த சம்பவம் சென்றுள்ளது.

இதையடுத்து, வடமாநில தொழிலாளர்களுக்கு பண உதவி அளித்து, 10 பேரை ரயில் மூலமாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை விமானம் மூலமாகவும் மேற்கு வங்கத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ச‌சிதரன் அனுப்பி வைத்துள்ளார்.

இதுபோன்று வேலை இல்லாமல் பசியால் வாடும் தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த மாநில அரசும், தமிழ்நாடு அரசும் உதவி மையங்களை அமைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்