நொடியில் பிரிந்த மகனின் உயிர் தீரா வேதனையிலும் தாய் கொடுத்த சம்மதம்..காண்போரை கலங்கடித்த துயரம்
விபத்து ஒரு மனிதனின் வாழ்க்கையை சிதைத்து போடும்.. ஆனால் மகனை இழந்த கதறும் ஒரு தாயின் கண்ணீர் 6 பேருக்கு வாழ்வளித்திருக்கிறது.... சென்னையில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு தாயின் அழுகுரல் மட்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது..
மூளைச்சாவடைந்த மகனின் சடலத்தை கையில் ஏந்தி உச்சி முகர்ந்து கதறித்துடித்த தாய்... அந்த ஆறாத ரணத்திலும் மகனின் உடல் உறுப்புகளை தானம் கொடுத்திருக்கிறார்....
சாலை விபத்தில் சிக்கி 20 வயதில் மூளைச்சாவு என்பது ஒரு குடும்பத்திற்கு எத்தனை பெரிய துயரத்தை தரும்..?
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் புவனேஸ்வர்....
குடும்ப நிகழ்ச்சிக்காக பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர், டிராக்டரில் மோதி படுகாயமடைந்த நிலையில், ஹெல்மெட் அணியாமல் சென்றதால் நரம்பு மண்டலமே சிதைந்து அவரின் கனவை சிதைத்து போட்டிருக்கிறது.....ஆம்.. மூளைச்சாவு அடைந்தார் 20 வயதான அந்த இளைஞர்...
மகனின் நிலை கண்டு பதறிப்போய் இருந்த பெற்றோரிடம், உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடியுமா? என தயங்கியபடியே கோரிக்கை வைத்திருக்கின்றனர் மருத்துவர்கள்...
தீராத மன வேதனையிலும் இளைஞரின் பெற்றோர் தெரிவித்த அந்த சம்மதம்... ஆறு உயிர்களுக்கு மறு வாழ்வு அளித்து, மனிதநேயத்தில் ஒருபடி மேலே சென்றிருக்கிறார்கள் அவர்கள்...
இளைஞரின் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கண் விழிகள் போன்றவை 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்ட சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களும், செவிலியர்களும் நெகிழ்ச்சியடைந்தனர்...
செய்த நன்றிக்கு கைமாறு செய்யும் வகையில் இளைஞரின் சடலத்தின் இருபுறமும் நின்று செவிலியர்கள் பிரியா விடை கொடுத்தது மருத்துவமனை வளாகத்தையே கலங்கடித்தது...