#Justin|| சென்னையை கலக்கிய `புழல் சிறை ராணி' அடந்த காட்டில் பிடிபட்டார்..!

x

புழல் சிறையில் இருந்து தப்பிச்சென்ற பெண் கைதியை பெங்களூரில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து கைது செய்த போலீசார்.

சுவர் மீது ஏறி பால்சீலிங் வழியாக சிறையில் இருந்து தப்பிச்சென்றதாக பெண் கைதி வாக்குமூலம்.

சென்னையில் தொடர்ச்சியாக கைவரிசை காட்டி வந்த ஜெயந்தி(32) என்பவரை அரும்பாக்கம் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயந்தி மீது பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் சிறப்பு வார்டில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி 5 மணி அளவில் புழல் பெண்கள் சிறையில் உள்ள கைதிகளை கணக்கெடுக்கும் பணியில் சிறை வார்டன்கள் ஈடுபட்டபோது ஜெயந்தி காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறை வார்ட்ன்கள் நடத்திய விசாரணையில் ஜெயந்தி காலை நேர்காணல் நடத்தும் அறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதும், அதன்பின்பு ஆண்கள் சிறை வழியாக சென்று தப்பி இருக்கலாம் என தெரியவந்தது. இதனையடுத்து புழல் சிறையிலிருந்து பெண் கைதி ஜெயந்தி தப்பிஓடியது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் புழல் போலீசார் அனைத்து காவல் நிலையத்திற்கும் ஜெயந்தியின் புகைப்படத்தை அனுப்பியும் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும்

புழல் சிறையில் கண்காணிப்பு பணியில் கவனக் குறைவாக செயல்பட்டதாக கூறி புழல் சிறை பெண் வார்டன்கள் கனகலட்சுமி மற்றும் கோகிலா ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

தப்பிச்சென்ற கைதியை பிடிக்க புழல் போலீசார் இரண்டு தனிப்படை அமைத்து ஜெயந்தியை பிடிக்க பெங்களூருவுக்கு விரைந்தனர். இந்நிலையில் பெங்களூரு கெங்கேரி காட்டுப்பகுதியில் குடும்பத்துடன் ஜெயந்தி பதுங்கி இருந்த போது தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயந்தியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல நாட்களாக திட்டமிட்டு நேர்காணல் அறையை சுத்தம் செய்யும் போது வார்டன்கள் பார்க்காத சமயத்தில் பெரிய சுவர் மீது ஏறி பால்சீலிங் வழியாக புழல் சிறையில் இருந்து தப்பிச்சென்றதாக வாக்குமூலம் தெரிவித்துள்ளார். பின்னர் ஆட்டோ மூலமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்ற ஜெயந்தி, வழக்கறிஞர் மூலமாக ஆட்டோ ஓட்டுனரின் செல்போன் எண்ணிற்கு பணம் அனுப்ப சொல்லி அதை எடுத்துக்கொண்டு, புது உடை எடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து ஆம்னி பேருந்து மூலமாக பெங்களூருக்கு சென்று, குடும்பத்தினரை அழைத்து ஜெயந்தி கெங்கேரி காட்டுப்பகுதிக்கு தப்பிச்சென்றுள்ளார்.

ஜெயந்தி கொடுத்த அனைத்து முகவரிகளும் தவறானவை என்பதால் தனிப்படை போலீசார் திணறிய நிலையில், ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் உதவியோடு தனிப்படை போலீசார் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு சென்று ஜெயந்தியை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஜெயந்தியை போலீசார் சென்னைக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஜெயந்தி தப்பிக்க சிறை காவலர்கள் ஏதேனும் உதவியுள்ளனரா, ஜெயந்திக்கு பண உதவி அளித்த வழக்கறிஞர் யார் என்பது தொடர்பாக புழல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்