சென்னையில் பள்ளி நண்பனுடன் சேர்ந்து போலீஸ் எடுத்த புது அவதாரம் - மற்ற போலீஸ்களே ஒரு நிமிடம் ஷாக் - எதிர்பாரா டுவிஸ்ட்
ரூபாய் 13 லட்சம் கடனை அடைக்க பள்ளி நண்பருடன் சேர்ந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்...
சென்னை கொண்டி தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சார்லஸ். 2009 பேட்ஜ் முதல்நிலை காவலரான இவர் பொன்னேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், ஏலச்சீட்டு எடுத்த சார்லசுக்கு ரூபாய் 13 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பணம் கொடுத்தவர் திருப்பி கேட்டு தொந்தரவு கொடுத்ததால் காவலர் சார்லஸ் கடனை அடைக்க கொள்ளையனாக மாறி உள்ளார்.
ஹவாலா பணம் எடுத்து வந்தவரை நோட்டமிட்டு, பள்ளி நண்பனோடு சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது அம்பலம்
ஈவினிங் பஜார் பகுதியில் ஹவாலா பணம் கைமாறுவதை அறிந்த காவலர் சார்லஸ், புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த தனது பள்ளி கால நண்பரும் அதிமுக நிர்வாகியின் மகனுமான ராமச்சந்திரன் மூலம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த 14 ஆம் தேதி ஜெய்னுல் ஆசாத் என்பவர் ரூபாய் 6 லட்சத்துடன் அங்குள்ள ஏடிம் மையத்துக்கு செல்வதை இருவரும் நோட்டமிட்டுள்ளனர். ஏடிஎம் மையத்தில் இருந்து வெளியே வந்த அவரை போலீஸ் சீருடையில் இருந்த சார்லஸ் சோதனை செய்துள்ளார்.
ஹவாலா பணம் என்பதால் புகார் அளிக்கமாட்டார் என நினைத்து வழிப்பறி
அவரிடம் இருந்த ரூபாய் 5 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்த இருவரும் போலீஸ் நிலையம் வந்து பெற்று கொள்ளுமாறு கூறிவிட்டு பணத்துடன் கிளம்பி உள்ளனர்.
ஹவாலா பணம் என்பதால் புகாரளித்து அதனை வாங்க ஆசாத் வரமாட்டார் என கருதிய இருவரும் பணத்தை பங்கிட்டு கொண்டனர். ஆனால், அவர் கீழ்ப்பாக்கம் போலீசில் புகாரளித்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் காவலர் சார்லஸ் நண்பருடன் சேர்ந்து பணத்தை பறித்து கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காவலரோடு சேர்ந்து சிக்கிய அதிமுக நிர்வாகியின் மகன் தொடர்ந்து, இந்த பணம் தொடர்பாக ஆசாத் வேலை பார்த்த செல்போன் கடையை போலீசார் சோதனை செய்ய சென்றனர். அப்போது, போலீசாருடன், வியாபாரிகள் சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடனை அடைக்க கொள்ளையனாக மாறிய காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.