அமைச்சர் சாமிநாதன் தலைமையில் பத்திரிகையாளர் நல வாரியக் கூட்டம்

x

பத்திரிகையாளர் நல வாரியத்தின் எட்டாவது கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தினத்தந்தி குழுமத்தின் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் உள்ளிட்ட நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பத்திரிகையாளர் ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

பத்திரிகையாளர் நலவாரியம் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை மற்றும் ஈமசடங்கு உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

மஜீத்தியா கமிட்டி- ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்றும், அந்நிறுவனங்களின் பரிந்துரை அடிப்படையில் அவர்களை பத்திரிகையாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்திடவும் இக்கூட்டத்தில் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்