சென்னையில் அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், வெள்ளத் தடுப்பு பணிகளை இம்மாதம் 30-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், நீர்வளத்துறை பொறியாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில், பருவமழைக்கு முந்தைய முன்னேற்பாட்டு பணிகளாக 38 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
வீராங்கல்ஓடை, ஓட்டேரிநல்லா, விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், வேளச்சேரி ஏரி, கூவம் மற்றும் அடையாறில் உள்ள மிதக்கும் தாவரங்கள், பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளை வருகிற 30ம் தேதிக்குள் முடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகளாக 590 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு,
தணிகாச்சலம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், மாதவரம் ரெட்டேரி மற்றும் கெருகம்பாக்கம் கால்வாயில் நடைபெற்று வரும் பணிகளை 30ம் தேதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
மணல் மூட்டைகள், காலி கோணிகள், சவுக்கு கம்புகளை போதுமான அளவில் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.