சென்னை லோக்கல் ட்ரெயினில் செல்பவர்களே உஷார் - மேலே விழும் துப்பட்டா.. பின்னால் நிற்கும் உருவம்
சென்னையில் புறநகரில் பயணிக்கும் பயணிகளின் நகை உள்ளிட்ட பொருட்கள் தொடர்பாக அடிக்கடி திருடு போவதாகத் தொடர்ச்சியாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகாலமாக இந்த திருட்டில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிப் பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் கூட்ட நெரிசலில் ரயிலில் முண்டியடித்துக் கொண்டு ஏறும் சமயத்தில் துப்பட்டா மற்றும் சால்வையை வீசி
திருடுவது தெரியவந்தது. இதே பாணியில் திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்ட ஓசூரைச் சேர்ந்த கண்மணி மற்றும் அவரது சகோதரி ரேகா தான் சென்னை சம்பவத்திலும் ஈடுபட்டது என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில், கூட்ட நெரிசலில் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் இதே பாணியைப் பயன்படுத்திப் பல ஆண்டுகளாகத் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக இருவர் மீதும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து 11 கிராம் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.