சென்னையின் முக்கிய பகுதியில் விற்பனையாகாமல் இருக்கும் வீடுகள்.. குறையுமா விலை?

x

அனைவருக்கும் வீட்டு வசதி என்ற அடிப்படையை குறிக்கோளாக கொண்டு உருவாக்கப்பட்டது தான் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்...

குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களை வீட்டு உரிமையாளராக மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதே இதன் பிரதான நோக்கம்..

அந்த வகையில், ஏழை, எளிய மக்களும் வாங்கும் வகையில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, அதனை விற்பனை செய்து வருகிறது வீட்டு வசதி வாரியம்.

ஆனால், விற்பனைக்காக கட்டப்பட்ட குடியிருப்புகள் பல, விற்பனை ஆகாமல் காத்து வாங்கி வருகின்றன..

ஆம், தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரத்து 753 அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளன. அதில் சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 279 அடுக்குமாடி குடியிருப்புகளும், பிற மாவட்டங்களில் 474 அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன.

குறிப்பாக சென்னையில் சோழிங்கநல்லூர், அம்பத்தூர், கேகே நகர், ஜாஃபர்கான் பேட்டை, செனாய் நகர் போன்ற இடங்களில் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இன்றளவும் விற்பனையாகவில்லை..

இதற்கு முக்கிய காரணம் விலை நிர்ணயம் தான் என்கிறார் குடியிருப்புவாசி ராஜேந்திரன்...

அதிலும் கடன் வழங்குவதில் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது மக்களுக்கு சிரமமாக உள்ளதாகவும் தெரிவிக்கிறார்..

விற்பனையாகாத வீடுகளை விற்பனை செய்வதற்கு தனியார் கட்டுமான நிறுவனத்தின் கூட்டமைப்பையும் வீட்டு வசதி வாரியம் நாடி உள்ளது.

இதற்கிடையில், குடியிருப்புகளை விற்பனை செய்ய, கண்காட்சி அரங்கங்கள் அமைத்து விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தனியார் கட்டிட நிறுவனங்கள் பின்பற்றுவதைப் போல, Marketing Agency மூலம் விற்பனை செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் தெரிவித்தார்.

மேலும், வாரியக் கூட்டத் தீர்மானத்தின்படி விற்பனையாகாத அலகுகளை (Unsold units) பரிசீலனை செய்து விலை குறைப்பு செய்வதற்கு உயர்மட்ட அதிகாரிகள் கொண்டு குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் வீட்டு வசதி ஏற்படுத்த வேண்டும் என்கிற கனவோடு தொடங்கப்பட்ட வீட்டு வசதி வாரியம் அந்தக் கனவை நிறைவேற்ற முடியாமல் தடுமாறி வருவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது


Next Story

மேலும் செய்திகள்