வயிற்றில் கருவோடு போலீஸ் மரணம்..! அலைக்கழித்த மருத்துவமனை ``போலீசுக்கே இந்த நிலையா..?''

x

காய்ச்சல் காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், முறையான சிகிச்சை அளிக்கப்படாததே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். என்ன நடந்தது ? என்பதை பார்க்கலாம் விரிவாக...

சென்னை எழும்பூர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றி வந்தவர் 26 வயதான பெண் காவலர் மேனகா...

4 மாத கர்ப்பிணியாக இருந்த மேனகா, காய்ச்சல் ஏற்பட்டு கடந்த 29ம் தேதி அமைந்தகரை பகுதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக கடந்த 31ம் தேதி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..

மேனகாவின் இறப்பு செய்தியை கேட்டு அதிர்ந்து போன குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறிய காட்சிகள் காண்போரையும் கலங்க செய்தது..

கர்ப்பிணியான மேனகாவிற்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டும் உறவினர்கள், மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..

மருத்துவமனைக்கு வந்த முதல் நாள் மருத்துவர்கள் கண்டுகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டும் உறவினர்கள், போலீஸ் என கூறியதற்கு பின்னரே சிகிச்சையளிக்க முற்பட்டதாகவும் கூறுகின்றனர்.

இவ்விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கு காவல்துறையினர் விரைந்தனர். மேனகாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில், மேனகாவின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது..

இதன் பின் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை பூசம் பட்டி கிராமத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது..


Next Story

மேலும் செய்திகள்