சென்னையை உலுக்கிய மெகா தங்க நகை மோசடி - கிளற கிளற வெளி வரும் அதிர்ச்சி தகவல்
சென்னையை உலுக்கிய மெகா தங்க நகை மோசடி - கிளற கிளற வெளி வரும் அதிர்ச்சி தகவல்
சென்னையில் தங்கம் புதுப்பிக்கும் நிறுவனங்களை குறி வைத்து, சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ஆகாஷ், பழைய தங்கத்தை புதுப்பித்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் புளியந்தோப்பு ஜூவல்லரி ஒன்றில் வேலை பார்த்து வந்த தீரேந்தர் சிங் மற்றும் பகவான் சிங் இருவரும் பழைய தங்கத்தை கொடுத்து, சுத்த தங்கங்களை வாங்கி, பல்வேறு நகைக் கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். தொடர்ந்து இவர்கள் மீதான நம்பிக்கை அடிப்படையில் பழைய தங்கத்தை பெறாமல் சுமார் 1,600 கிராம் சுத்த தங்கம் மற்றும் செலவிற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார் ஆகாஷ். ஆனால் அதன் பின் அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த அவர், யானைக்கவுனி போலீசில் புகார் அளிக்க சென்ற போது, 15க்கும் மேற்பட்டோர் இதுபோன்று ஏமாந்திருப்பது தெரியவந்தது. இவ்வாறாக ஏமாற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மோசடியில் ஈடுபட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானை சேர்ந்த இருவரும் மேலும் சில பேருடன் சேர்ந்து கூட்டாக இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து கும்பலை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.