சைபர் கிரைமில் பணத்தை இழந்தால் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டாம்.. இதை செய்தால் போதும்..மக்கள் கவனத்திற்கு
சென்னையில் சைபர் கிரைம் குற்றத்தில் பணத்தை இழந்தால் மீட்பதற்கு புதிய நடைமுறையை காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை ஆயிரத்து 679 சைபர் குற்ற வழக்குகள் பதிவான நிலையில், ஆயிரத்து 589 வழக்குகள் பண இழப்பு தொடர்புடையவை என காவல் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சைபர் குற்றங்களின் விசாரணை அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் ஒரு வழிமுறையை வெளியிட்டுள்ளார். கடந்த காலங்களில் சைபர் குற்ற மோசடியில் பணத்தை இழந்தால், வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் தெரிவித்து பணத்தை முடக்க நடவடிக்கை எடுப்பார்கள். அதற்கு முன்பே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும் என வங்கி நிர்வாகம் வற்புறுத்தி வந்தது. இதனால், வங்கிக் கணக்கை முடக்கும் நடவடிக்கை தாமதமாகி, பணத்தை மீட்க முடியாத நிலையே இருந்தது. இதை தவிர்க்கும் வகையில், சைபர் குற்றத்தில் பாதிக்கப்பட்டதும், தேசிய சைபர் குற்றங்களை புகாரளிக்கும் தளமான NCRP-யில் பதிவு செய்து விட்டு, அதன் மூலமாக வங்கிக் கணக்கை முடக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.