நிலத்தை அபகரிக்க காவல்துறை உதவி - ஐகோர்ட் அதிரடி உத்தரவு
நிலத்தை அபகரித்துவிட்டார்கள் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது பாதுகாப்பு வழங்கவும், நிலத்தை மீட்டு தரவும் கேட்டுக்கொண்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், நிலம் கார்த்திக்குக்கு சொந்தமானது என்பதற்கு அனைத்து முகாந்திரம் இருந்தும், காவல்துறை நிலத்தை அபகரிக்க உதவியிருக்கிறது என கண்டனம் தெரிவித்தார்.
ரவுடிகளுடன் கைகோர்த்துக் கொண்டு போலீசார், உண்மையான நில உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக வழக்குகள் வருவது அதிகரித்து இருக்கிறது, அரசியல்வாதிகளும் சம்பந்தப்படுவது விவகாரங்களை மேலும் மோசமாக்கும் என்றார்.
இதுபோன்ற வழக்குகளில் நேர்மையாக விசாரிக்க முடியாது என்பதை விசாரணை அமைப்புகள் வெளிப்படுத்தி வருவதாகவும், அப்பாவி மக்களுக்கு காவல்துறை மீதான நம்பிக்கை குலைந்துவிடும், இது நில மாபியாக்களையும், ரவுடிகளையும் ஊக்குவிப்பது போலாகிவிடும் என கடிந்துக் கொண்டார்.
இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றம் மவுனம் காக்க முடியாது என குறிப்பிட்டவர், சமீபகாலமாக தமிழகத்தில் ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழ்ந்த நில அபகரிப்பு தொடர்பான கொலை மற்றும் வன்முறை சம்பவங்களை போலீஸார் எப்படி விசாரிக்கின்றனர் என்பதை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். கார்த்திக் அளித்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய நீதிபதி, சிறப்புக் குழுவை அமைத்து 4 மாதங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.