அரசு கண்டக்டர் பலியில் யார் மீது தவறு? நேரில் பார்த்த பயணிகளின் ஷாக் தகவல்

x

அரசு கண்டக்டர் பலியில் யார் மீது தவறு? நேரில் பார்த்த பயணிகளின் ஷாக் தகவல்


சென்னை அரும்பாக்கத்தில் பயணியுடன் ஏற்பட்ட சண்டையில் நடத்துனர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் நடந்தது என்ன? போலீசார் கூறுவது என்ன? விரிவாக பார்க்கலாம்...

நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெகன்குமார்.. இவருக்கு மனைவி இரண்டு மகள்கள் உள்ள நிலையில், சென்னையில் தங்கி மாநகர போக்குவரத்து கழகத்தில் 112 வழித்தடத்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ளார்.

வியாழன் இரவு எம்.கே.பி நகர் - கோயம்பேடு வரையிலான 46ஜி வழித்தடத்தில் நடத்துனர் இல்லாததால், ஜெகன்குமார் தற்காலிகமாக அந்த வழித்தடத்தில் பணிக்கு சென்றுள்ளார்.

என்.எஸ்.கே பேருந்து நிறுத்தத்தில் வேலூர் மாவட்டம் மாதனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர், மனைவியுடன் ஏறியுள்ளார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், பயணச்சீட்டு வாங்கும் போது நடத்துனர் ஜெகன்குமாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் மோதலாக வெடித்தது.

அப்போது நடத்துனர் தனது டிக்கெட் இயந்திரத்தை எடுத்து கோவிந்தனின் தலையில் அடித்ததால் அவர் காயமடைந்தார். பிரச்சினை பெரிதாகி பேருந்து ஓரம்கட்டப்பட, பதிலுக்கு கோவிந்தன் தாக்கியதில் நடத்துனர் ஜெகன்குமார் படியில் இருந்து கீழே விழுந்து மூக்கில் ரத்தம் வடிந்துள்ளது.

பின்னர் மக்கள் சமாதானம் செய்து இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், நடத்துனர் ஜெகன்குமார் செல்லும் வழியிலேயே வலிப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த தகவலை அறிந்து அரசு பேருந்து நடத்துனர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார், நடத்துனரை தாக்கியதாக கோவிந்தனை கைது செய்தனர். சிகிச்சைக்கு பிறகு அவரிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட பேருந்தில் சிசிடிவியை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த சூழலில், நடத்துநர் ஜெகன்குமாரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

நடத்துனர் இறந்த செய்தி கேட்டு சக ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குவிந்ததால், அசம்பாவிதத்தை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டனர்.

டிக்கெட் பிரச்சினையால் ஏற்பட்ட கைகலப்பில் அரசு பேருந்து நடந்துனர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்