ஸ்தம்பித்த சென்னை... நேரம் பார்த்து வேலையை காட்டிய ஆம்னி பஸ்கள்... ஆடிப்போன மக்கள்...

x

தொடர் விடுமுறையையொட்டி பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் அதிரடியாக உயர்ந்திருக்கிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

நீண்ட விடுமுறை எப்ப வரும்.. ஊருக்கு போகலாம் என காத்திருந்த வெளிமாவட்ட மக்களுக்கு நற்செய்தியாய் கிடைத்தது இந்த வார விடுமுறை..

சுதந்திர தின விடுமுறையுடன் வார இறுதி நாட்களும் வருவதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அல்வா போல் கிடைக்க...சொந்த ஊரில் விடுமுறையை கழிக்க ஆயத்தமாகி விட்டனர்.

ஆனால் அவர்களுக்கு அதிரடி ட்விஸ்ட் கொடுத்துள்ளது ஆம்னி பேருந்து கட்டணம்...

ஆம், விடுமுறை தினம் என்பதால், இரு மடங்கு கட்டணத்தை உயர்த்தி ஷாக் கொடுத்துள்ளனர் ஆம்னி பஸ் உரிமையாளர்கள்..

சென்னையில் இருந்து நெல்லை செல்ல ஆயிரம் ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது 2 ஆயிரத்து 700 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது..

இதே போல் சென்னையில் இருந்து கோவை செல்ல, சாதாரணமாக 800 ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது அதுவே உயர்ந்து 2 ஆயிரத்து 600 ரூபாயை கடந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது..

மேலும் சென்னையில் இருந்து சேலம் செல்ல ஆயிரத்து 800 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது...

இதைவிட கவலைக்கிடமாகியுள்ளது குமரி செல்பவர்களின் நிலை. சாதாரண நாட்களில் ஆயிரம் ரூபாய் முதல் வசூலிக்கப்படும் சூழலில், தற்போது 3 ஆயிரம் ரூபாய் கடந்து கட்டணம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

விடுமுறை தினங்கள் நெருங்கும் போதெல்லாம், ஆம்னி பேருந்து கட்டணங்கள் உயர்வது வழக்கமான ஒன்றாக மாறி விட்ட நிலையில், பயணிகளின் நலன் கருதி அவர்களின் பொருளாதார சுமையை குறைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகின்றனர் மக்கள்...

இதுமட்டுமன்றி ஊரில் இருந்து சென்னைக்கு திரும்பும் போதும் கட்டணம் உயர்த்தும் வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கையாக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்