முட்டி போட சொன்ன "லேடி" போலீஸ் - பஸ்க்கு அடியில் தலையை வைத்த இளைஞர்.. பதற்றமான அம்பத்தூர் சாலை..!
சென்னை அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அத்திப்பட்டு ஐசிஎப் காலனியை சேர்ந்த இளம்பெண், அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் குடும்பப் பிரச்சனை காரணமாக தன் கணவர் கார்த்திக் மீது புகார் அளித்துள்ளார். இதனால் போலீசார் காலை கார்த்திக்கை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அங்கு சென்ற கார்த்திக் மாலை வரை காத்திருந்தும் போலீசார் இவரை விசாரிக்காமல் இருந்துள்ளனர். அங்கு பணியில் இருந்த பெண் போலீசிடம் தான் சாப்பிடாமல் இருப்பதாகவும், விசாரித்து அனுப்பினால் சாப்பிட செல்வதாகவும் கார்த்திக் கூறியுள்ளார். அதற்கு அந்தப் பெண் போலீஸ் வெளியில் சென்று முட்டி போடுமாறு கடுமையாக கூறியதாக தெரிகிறது. பசி மற்றும் போலீசாரின் அலட்சியத்தால் மன உளைச்சலுக்கு ஆளான கார்த்திக், அம்பத்தூர் காவல் நிலையம் எதிரில் சென்னை சி.டி.எச் சாலை
நடுரோட்டில் முட்டி போட்டபடி கூச்சலிட்டார். இதனால் வாகன ஓட்டிகள் பதற்றமானதால் போலீசார் கார்த்திக்கை மீட்க முயன்றனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கார்த்தி அந்த வழியே வந்த பேருந்து ஒன்றின் சக்கரத்தில் தலையை வைத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின் போலீசார் அவரை மீட்டு வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர்.