பாஜக பெண் வேட்பாளர் செய்த காரியம் - உச்சகட்ட கோபத்தில் கொதித்த கார்கே
நாட்டில் சுதந்திரமாகவும், நியாயமாகவும்தான் தேர்தல் நடக்கிறதா என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆதங்கமாக கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
வாக்குப்பதிவு விபரங்களை வெளியிடுவது குறித்து காங்கிரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இந்த சூழலில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாட்டின் எதிர்காலத்தையும், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றவர், அப்படியில்லை என்றால் மீண்டும் அடிமைகளாகிவிடுவோம் என எச்சரித்தார். ஜனநாயகம் இல்லாமல் எதேச்சதிகாரம் மற்றும் சர்வாதிகாரம் இருந்தால் உங்கள் சித்தாந்தம் கொண்ட ஒருவரை எப்படி தேர்வு செய்வீர்கள் என கேள்வியை எழுப்பினார். பாஜகவை சேர்ந்த பெரிய தலைவர் போட்டியிட்டால், எதிர்க்கட்சி தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் நிறுத்தப்படுகிறார்கள் என குற்றம் சாட்டினார். ஐதராபாத்தில் பாஜகவின் பெண் வேட்பாளர் ஒருவர் பர்தாவை திறந்து பெண்களின் அடையாளத்தை சரிபார்க்கிறார் என குறிப்பிட்ட கார்கே, இப்படித்தான் சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல் நடத்தப்படுகிறதா என கேள்வியை எழுப்பியுள்ளார்.