"பாட புத்தகங்களில் இந்தியாவுக்கு பதில் பாரத்" ஆவேசமான வைகோ
பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றும் முயற்சிக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய பாஜக அரசு 'பாரத்' என்பதை மட்டுமே அதிகாரப்பூர்வ பெயராக மாற்ற முடிவு செய்தால், அவர்கள் அரசியலமைப்பின் 1-வது பிரிவைத் திருத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், அவையில் 66 விழுக்காடு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து வரும் ஒன்றிய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வராமலேயே இந்தியாவின் பெயரை பாரத் என்று நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். என்.சி.இ.ஆர்.டி, பள்ளிப் பாட புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்கு முயற்சிப்பது அதன் அதிகார வரம்பை மீறியது மட்டுமல்ல, சட்ட நெறிமுறைகளையும் மீறிய செயலாகும் என்றும், இந்தப் பரிந்துரையை ஏற்கக் கூடாது என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.