முக்தி அடைந்தார் பங்காரு அடிகளார்..பளிங்கு வடிவில் ஜோதி ரூப காட்சி`அம்மா' பக்தர்களுக்கு அதிசய செய்தி
பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்த, தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயிலுக்கு படையெடுத்து வந்தனர்.
பங்காரு அடிகளாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, மேல்மருவத்தூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் விடிய விடிய அஞ்சலி செலுத்தினர்.
பங்காரு அடிகளார் இறந்த முதல் நாளன்று, பங்காரு அடிகளாரின் உடலுக்கு புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாமக நிறுவனர் ராமதாஸ், துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அதன் தொடர்ச்சியாக 2வது நாளான வெள்ளிக்கிழமை அன்று, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மேல்மருவத்தூர் இல்லத்தில் இருந்து பங்காரு அடிகளாரின் உடலானது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆதிபராசக்தி கோவிலின் உட்புறத்தில் உள்ள மைய மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கபட்டது.
அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் மலர்களை தூவி பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ஆதிபராசக்தி நிறுவனத்தின் மாணவர்கள் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து பங்காரு அடிகளாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, பொன்முடி, கே.என்.நேரு, காந்தி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தா.மோ.அன்பரசன், காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, திருநாவுக்கரசர், அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், எம்.சி. .சம்பத், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், சசிகலா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன், ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், ட்ரம்ஸ் சிவமணி, நடிகர் சந்தானம், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தமாக தலைவர் ஜிகே வாசன், புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில், 2 டிஜஜி 6 எஸ்பி உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கோவில் மண்டப வளாகத்தில் வெளியே 14 காவலர்கள் என 3 சுற்றுகளாக 42 குண்டுகள் முழங்க காவல்துறை சார்பில், அரசு மரியாதை அளிக்கப்பட்டு பங்காரு அடிகளாரின் உடலானது, கோவில் கருவறையில் தெற்கு பகுதியில் புற்றுகோவில் அருகே கொண்டு செல்லப்பட்டு, அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு, வாசனைத் திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. உறவினர்கள் முன்னிலையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.
பின்னர், புற்று மண்டபத்தில், உட்கார்ந்த வடிவில் சித்தர் முறைப்படி, பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பக்தர்களின் நெஞ்சங்களில் ஆதிபராசக்தி 'அம்மாவாக' வலம் வந்த பங்காரு அடிகளார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பளிங்கு சிலை வைக்கப்பட உள்ளது.