ஆம்ஸ்ட்ராங் கொலையில் நடந்தது என்ன? - தந்தை மகனை நேருக்கு நேர் வைத்து நடந்த விசாரணை

x

ஆயுள் தண்டனை கைதியான பிரபல ரவுடி நாகேந்திரனை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்திருக்கும் போலீசார், 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டமிட்டது எப்படி? ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல வேண்டும் என அணுகியது யார்? மற்றும் சிறைக்குள் சந்தித்த ரவுடிகள் குறித்தான கேள்விகளை முன் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், பெரும்பாலான கேள்விகளுக்கு நாகேந்திரன் அமைதியாகவே இருப்பதாகவும், அவ்வப்போது பதில் கூறினாலும் தனக்கும் இந்த கொலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றே அவர் கூறுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனையும் நேரில் வைத்துக் கொண்டு விசாரித்தும் நாகேந்திரன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. நாகேந்திரனை கைது செய்யும் போது வாரண்டில் கையெழுத்திட மறுத்த அவர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் போதும் போலீஸ் காவலில் செல்ல மாட்டேன் என கூறி முறையிட்டதாகவும் தகவல் வெளியானது. வாரத்தில் 2 முறை டயாலிசிஸ் செய்து வருவதாக நீதிமன்றத்தில் முறையிட்ட நாகேந்திரன், போலீஸ் விசாரணையிலும் தனது உடல் நிலையை காரணம் காட்டி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்