‘AI’ மூலம் SPB யின் குரல்.."ரூ.1 கோடி கொடுக்க வேண்டும்" - இசையமைப்பாளருக்கு மகன் அனுப்பிய நோட்டீஸ்!
ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலை பயன்படுத்திய தெலுங்கு இசையமைப்பாளர் விவேக் சாகருக்கு, எஸ்.பி.பி. சரண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
"கீடா கோலா" என்ற தெலுங்கு படத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் குரலை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இசையமைப்பாளர் விவேக் சாகர் பயன்படுத்தியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, விவேக் சாகருக்கு, எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி. சரண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் தனது அப்பா மறைவுக்குப் பின் தொழில்நுட்பம் மூலம் அவரது குரல் பயன்படுத்தப்படுவது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் தங்களுக்கு தெரியப்படுத்தாமலும், அனுமதி பெறாமலும் பயன்படுத்தப்பட்டுள்ளது வேதனையை கொடுப்பதாக கூறியுள்ளார். வணிக சுரண்டலுக்காக ஒரு லெஜென்டின் குரல் இப்படி பயன்படுத்தக் கூடாது என்றும், இந்த நிலை தொடர்ந்தால் பாடகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் சரண் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் அனுமதி பெறாமல் தனது தந்தையின் குரலை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்பதோடு, ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு மற்றும் ராயல்டியில் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.