தெரிந்தவர்களானாலும் ஆதார் கார்டை கொடுத்திடாதீங்க..கிட்டத்தட்ட 1 கோடி.. ஆடிப்போன 90 பெண்கள்..
திருப்பத்தூரில் மகளிர் சுய உதவிக்குழு பெயரில் கடன் வாங்கி 90 லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் வங்கி மேலாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜோலார்பேட்டையை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஷகிலா பானு என்பவருக்கு அயாத் நகரை சேர்ந்த முகமது ரபிக் என்பவர் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி இருக்கிறார். அதன்பேரில், மகளிர் குழுவை சேர்ந்த 90 பேரின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வாங்கிய அவர் தனியார் வங்கி மேலாளர் கவுதமிடம் வழங்கி உள்ளார். அதன்பேரில் தலா ஒரு லட்சம் வீதம் 90 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய முகமது ரபீக், மகளிர் குழு உறுப்பினர்களுக்கு தலா 10 ஆயிரம் மட்டும் வரவு வைத்துள்ளார். மீதி 81 லட்சத்தை வங்கி மேலாளருடன் சேர்ந்து முகமது ரபீக் மோசடி செய்துள்ளார். மகளிர் குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு தலா ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கி இருப்பதாக நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஜோலார்பேட்டை போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில் வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.