திடீரென உடைந்த பாதாள சாக்கடை... தெருவில் ஆறாக ஓடும் கழிவுநீர்...

x

கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.

ஆயிரம் விளக்கு உள்ளிட்ட 9 பகுதிகளில் உந்து நிலையம் மூலம் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு, சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பழைய கழிவுநீர் உந்து நிலையத்திற்கு வந்தடையும். இங்கிருந்து சாலையின் மறுபக்கம் உள்ள புதிய உந்து நிலையத்திற்கு கழிவுநீர் குழாய் மூலம் அனுப்பப்படுகிறது. இந்நிலையில், கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. நேற்று இரவு முதல் தேங்கிய கழிவுநீர் கே.எம்.கார்டன் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் 4 கழிவுநீர் அகற்றும் லாரிகள் மூலம் சாலைகள் மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய கழிவு நீரை அப்புறப்படுத்தினர். அத்தியாவசிய தேவைக்காக கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் இருப்பதாகவும் கழிவுநீர் வெளியேறுவதை நிரந்தரமாக தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்